இத்தொடரின் முதல் பாகங்களை படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நள்ளிரவு. பக்கத்தில் யார் இருக்கிறார் என்று அறியமுடியாத கடும் இருள். மழை ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக ஆங்காங்கே சிறிய மின்னலும் குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டிருந்தது. படகுக்காரர்கள் வைத்திருந்த டோர்ச்லைட் ஒளியை தவிர வேறு வெளிச்சம் எதுவும் இல்லை.
”எல்லாம் சரியோ... பிறகு வெளிக்கிட்டாப்பிறகு அத விட்டிட்டம். இத விட்டிட்டம் எண்டு கத்தக்கூடாது சொல்லிப்போட்டன்...!”
பாலன் அண்ணை கண்டிப்பாக கூறிவிட்டு நங்கூரத்தை இழுக்கத்தொடங்கினார்.
“பாலன் அண்ணை... மழை வரும்போல கிடக்கு.. இப்ப வெளிக்கிடுறம்.. சரியா வருமே” ராசன் மாமா சந்தேகத்துடன் கேட்டார்.
”இஞ்சேர் ராசன்.. இது ஆடி மழை. பெரிசா பெய்யாது. சும்மா தூறும். அதோட இந்த நேரம் தான் அவங்கட ரோந்தும் குறைவா இருக்கும்...
காற்று வேறு சிறிது பலமாக வீசிக்கொண்டிருந்தது. இவ்வளவு நேரமும் இருந்த பிரிவுத்துயரை ஓரங்கட்டி இப்போது இலேசான பயம் ஒவ்வொருவர் மனங்களிலும் எட்டிப்பார்க்கத்தொடங்கிவிட்டது. பாலன் அண்ணையும் அவருடன் உதவிக்கு வந்திருந்த கதிரேசன் அண்ணையும் துடுப்பு வலிக்க தொடங்கினார்கள். படகு கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தொடங்கியது. எமக்கும் வன்னி மண்ணுக்குமான தொடர்புக் கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கியது.
ஒரு துடுப்பு கட்டையை எடுத்து அப்பாவிடம் கொடுத்த பாலன் அண்ணை “ அப்பன் அண்ணை நீங்களும் ஒரு கை போடுங்கோவன்” என்றார்
“ஏன் பாலன் அண்ணை.. இஞ்சின போடலாம்தானே?”
“இல்லை அப்பன் அண்ணை. கொஞ்சத்தூரம் போகட்டும்... உங்களுக்கு தெரியாததே.. உங்கினேக்க கரைவழிய கிடப்பாங்கள்..”
”அதுவும் சரிதான்....”
கரைதேடி ஓடிவரும் அலைகளின் கனவுகளை சிதைத்துக்கொண்டே படகு முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அலைகளின் ஒலியும் அதை கிழிக்கும் துடுப்பின் ஒலியும் நாம் இருவரும் தனித்துவிட்டோமோ என ஏங்குகையில், இல்லையில்லை நானும் கூடவே இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே எங்கள் மேனிகளை உரசிச்சென்றது கடற்காற்று.
முகம் தெரியாத இரவு, அலைகளின் ஆர்ப்பரிப்பு, திடீர் திடீர் என கடற்காற்று வந்து மோதுகையில் ஒரு கணம் சிலிர்க்கும் மேனி இவற்றையெல்லாம் யாரும் அனுபவித்ததாய் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை பார்த்தபடி மௌனச்சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை மகிழ்ச்சியின்போது மகிழ்வையும், துன்பத்தின்போது துயரத்தையுமே அனுபவிக்க தம்மை பழக்கிக்கொண்டவர்கள். எந்த உணர்ச்சிகளிலும் மகிழ்ச்சியை மாத்திரமே பிரித்தெடுக்கும் ஆற்றலை சிறுவயதை கடக்கும்போதே தொலைத்துவிட்டவர்கள்.
நான் மட்டும் பெரியவனாகாமல் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்று அந்த ஒரு கணத்தில் ஓர் நப்பாசை என் மனதில்.
”கதிர் இஞ்சின போடு பார்ப்பம்..... எனி பிரச்சினை இல்லை”
“ஓமண்ணை போடுறன்...”
துடுப்பு தடியை இழுத்து படகின் ஓரமாக பார்த்து வைத்துவிட்டு தட்டுத்தடுமாறி பின்பக்கம் நோக்கி சென்றார் கதிரேசன் அண்ணா.
“ எட குறுக்கால போவானே...!! காலை மிதியாமல் போவன்...”
ராசன் மாமாவின் தாய் பொன்னம்மா கிழவி கத்தியபோதுதான் கிழவியின் காலை உழக்கியது தெரியவர சட்டென காலை எடுத்த கதிரேசன் அண்ணா சற்றே தடுமாறி அப்பாவின் மீது சாய்ந்தார். அவரை தாங்கி பிடித்தபடி “ கதிர் கொஞ்சம் பார்த்து போப்பா...... “ கொஞ்சம் கோபமாகவே சொன்னார் அப்பா.
ஐந்து ஆறுதடவை பிரச்சினை கொடுத்த எஞ்சின் ஒருவழியாக சரிவர முன்னைவிட வேகமாக படகு விரையத்தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணம் போய்ச்சேர்ந்திரலாம் என்ற நம்பிக்கை எல்லோர் மனங்களிலும் இலேசாக துளிர்விட ஆரம்பிக்க, அந்த நேரம் பார்த்து மறுபடியும் எஞ்சின் நின்றுவிட்டது.
”பயப்பிடாதீங்கோ… பிரச்சினை ஒண்டும் இல்லை.. ஒருக்கா ஸ்ரார்ட் பண்ணிவிட்டா சரியாகிடும்…”
கதிரேசன் அண்ணா மறுபடியும் ஸ்ரார்ட் பண்ண முயற்சிக்க, முடியவில்லை. திரும்ப திரும்ப ஸ்ரார்ட் பண்ணவும் எஞ்சின் ஸ்ரார்ட் ஆகவில்லை.
“ என்ன பாலன் அண்ணை… பழைய இஞ்சின கொண்டுவந்திட்டியள் போல… இந்த இஞ்சின நம்பியே கடல் பயணம் வெளிக்கிட்டனியள்”
ராசன் மாமா கோபத்துடன் கேட்டதை காதில் வாங்காததுபோல் “ஆராவது ஓடிக்கொலோன் வச்சிருந்தா கொஞ்சம் தாங்கோ” என்று நாங்கள் இருந்த பக்கம் திரும்பினார் பாலன் அண்ணா.
7 மாத கர்ப்பவதியாக இருந்த ராசன் மாமாவின் மனைவி கமலா அத்தைக்காக கொண்டுவந்த ஓடிக்கொலோனை, கொடுக்க மனமும் இன்றி வேறு வழியுமின்றி எடுத்து நீட்டிய பொன்னம்மா கிழவி “ முழுவதையும் முடிச்சுப்போடாத… எப்பன் எடுத்திட்டு தா…” என்று சிடுசிடுத்தார்.
பெற்றோலுடன் சிறிது ஓடிக்கொலோனையும் கலந்துவிட்டு மறுபடியும் ஸ்ரார்ட் பண்ண எஞ்சின் ஸ்ரார்ட் ஆகியது. பத்து நிமிட ஓட்டத்தின் பின் மறுபடியும் ஓடிக்கலோன். நான்கு மணிநேரம் தொடர்ந்து எஞ்சின் ஸ்ரார்ட் ஆவதும் அணைவதுமாக 5 கிலோமீற்றர் தூரம் தாண்டியிருப்போமா என்பது கூட சந்தேகமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு வெளிக்கத் தொடங்கியது.
”வெளிக்கிடமுதலே காச மட்டும் ஒழுங்கா வாங்கிப்போட்டிங்க… இதுகள சரி பார்க்கமாட்டிங்களே பாலன்.. நாங்க குழந்தை குட்டியோட வந்திருக்கிறம். பிள்ளைத்தாச்சி வேற இருக்குது. திடீர் எண்டு ஏதும் ஆகிப்போச்சுது எண்டா ஆர் பொறுப்பு..!!? இதுவரை பொறுமையாக இருந்த அப்பா கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டார்.
“கோவிக்காதிங்க அப்பன் அண்ண.. நாங்க என்ன வேணுமெண்டே செய்யிறம்… குறை நினைக்காம ஆம்பிளையள் எல்லாம் இறங்கி ஒரு கொஞ்ச தூரத்துக்கு இழுத்துக்கொண்டு வந்தால்……….”
“என்ன இழுத்துக்கிறதோ”
“இல்லை அப்பன் அண்ண உதில கொஞ்ச தூரத்திலதான் ஒரு பிட்டி இருக்குது. அதில உங்கள விட்டிட்டு நாங்க போய் இஞ்சின் மாத்திட்டு வாறம்… ஒரு கொஞ்ச தூரம்தான்……… துடுப்பும் போடேலாது அலை கூடீற்றுது….”
பாலன் அண்ணா காலில் விழாத குறையாக மன்றாடினார்.
”வேற வழி… நம்பி வந்திட்டம்… அனுபவிக்கத்தானே வேணும்… எல்லாரும் இறங்கி வாங்கோப்பா…”
அப்பாவும், படகில் இருந்த ஆண்களும் நெஞ்சுவரை முட்டியிருந்த நீரில் இறங்கி படகை இழுக்கத்தொடங்கினார்கள். சிறிது தூரம் இழுத்ததுமே எல்லோருக்கும் மூச்சுவாங்கத்தொடங்கிவிட்டது. போதாததற்கு அலை அடிக்கும்போது தலைக்குமேலால் நீர்செல்ல ஒருகணம் மூச்சு திணறி அவர்கள் படும் அவஸ்தை கண்டு படகில் இருந்தவர்கள் பாலன் அண்ணையை திட்டிக்கொண்டே வந்தார்கள்.
இரண்டு கிலோமீற்றர் தூரம் படகை இழுத்தபடியே கடந்துவிட்டிருப்போம். திடீரென கலமா அத்தை வீரிட்டு கத்தினார். “என்ன நடந்தது!!?? என்ன நடந்தது!!?? எல்லோரும் பதறிப்போனார்கள்.
காரணம் கமலா அத்தை கர்ப்பிணி. ஏதாவது நடந்துவிட்டதோ என்று எல்லோரும் பதற கமலா அத்தை படகிற்கு எதிர்த்திசையில் கையை காட்டினார்...
திரும்பி பார்க்க அங்கே இரண்டு உடல்கள் அலையில் அடிக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது.....
தொடரும்...............
சொல்விளக்கம்
பிள்ளைத்தாச்சி - கர்ப்பிணி
பிட்டி - கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் சிறிய மண் திட்டு
எப்பன் - சிறிதளவு
உழக்குதல் - மிதித்தல்
பின்குறிப்பு : போதிய நேரமின்மையால் தொடர் வர தாமதமாகிவிட்டது. அடுத்தடுத்த பகுதிகள் விரைவில் வரும்.


30 comments:
வணக்கம் மது,
நான் காலையில் வருகின்றேன்!
தொடருங்க!
மிக கனமான பகிர்வு..
அருமையான அனுபவப் பகிர்வு, கடைசியில் ஒரு அபாயத்துடன் முடித்தி உள்ளிர்கள், சீக்கரம் தொடருங்கள், தொடர காத்திருக்கிறோம்.
வணக்கம் மதுரன் ஐயா!
அழகான தொடரில் அதிகம் பின்னூட்டம் இடமுடியாத நேரமின்னைப் பிரச்சனை .
அடகுறுகால போவான் வார்த்தைஜாலம் ஈழத்து மொழிநடையை நினைத்து ஒரு கனம் சிரிப்பு வருகின்றது அதுவும் பாட்டிமார் சொல்லும் அழகே தனி அழகு அதை அற்புதமாக தொடருக்குள் பிடித்து வந்து விட்டீர்கள்.
இரவு கடல்ப்பயணங்கள் பற்றிய விபரிப்புடன் தொடர் நன்றாக நகர்கின்றது தொடருங்கள் தொடர்ந்து வாசிக்கின்றேன் பின்னூட்டம் இடுவது முடிந்தளவு மட்டும் தான் மதுரன். புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.
இந்தத் தொடரின் மூலம் பூநாரி சங்குப்பிட்டி இரவுப் பயணத்தை ஞாபகம் ஊட்டிவிட்டீர்கள் அதுவும் டொச் லைட் அடிக்கும் போது விட்டுவிட்டு அக்கம் பக்கம் பார்த்து அடிக்கும் பயம் அப்பாடா அது ஒருகாலம் மதுரன்!
வணக்கம்,மதுரன்!மயிர்க்கூச்செறிகிறது.தொடருங்கள்,தொடர்வோம்.
தொடர் படிக்கும் போதே மனசு பக்கு பக்கு என்று இருக்கு... என்ன நடக்குமோ என்ற ஆவலில்...... இதுதான் உங்கள் தொடரின் வெற்றி... வாழ்த்துக்கள் மதுரன்.
தொடரில் ஈழத்து பாஷையை மிக அழகாக எழுதுகிறீர்கள்.... அந்த வகையில் நிருபனுக்கு அடுத்து நீங்கள் தான். :)
தொடருக்கு இடையில் நிறைய இடைவெளி விடாமல் தொடருங்கள்...
நெஞ்சை பதறவைக்கும் சில சம்பவங்களோடு தொடர் பயனிக்கின்றது....தொடர்வோம்.
:(((
ஈழத் தமிழ் நடையில் அற்புதமாய் எழுதுறீங்க நண்பரே..
மனம் கனக்கும் சம்பங்கள் கோர்த்து வருவதால்
மனம் பதறிப்போகிறது..
தொடருங்கள்...
@நிரூபன்
நன்றி நிரூ
@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@A.R.ராஜகோபாலன்
நன்றி சார்
@தனிமரம்
வணக்கம் நேசன் அண்ணா
நீங்கள் பதிவை படித்தாலே போதும் . பின்னூட்டம் நேரம் கிடைக்கும்போது போடுங்கள்.
குறுக்காலை போவான் என்ற சொல் இப்போது பாவிப்பது குறைந்து வருகிறது. ஆச்சிமார்தான் பாவித்துவருகிறார்கள்
@Yoga.S.FR
நன்றீ ஐயா
@துஷ்யந்தன்
நன்றி துஷி..
@துஷ்யந்தன்தொடரில் ஈழத்து பாஷையை மிக அழகாக எழுதுகிறீர்கள்.... அந்த வகையில் நிருபனுக்கு அடுத்து நீங்கள் தான். :)
தொடருக்கு இடையில் நிறைய இடைவெளி விடாமல் தொடருங்கள்...//
ஏனய்யா? ஏனிந்த கொலைவெறி..
@veedu
நன்றி வீடு அண்ணாச்சி
வேதனையாக இருக்கிறது.
அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!
அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!
கஷ்டங்களை சொல்லும் பதிவு ,படிக்கும்பொழுதே மனம் கனமாகிறது
அடுத்த பதிவு உடனே தாருங்கள்
த.ம 7
தங்கள் எழுத்து சுகமாக இருக்கிறது,தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
வணக்கம் மாப்பிள..
தொடர் நல்லா இருக்கு.. அதிக இடை வெளி விடாது எழுதுங்கோ..
வாழ்த்துக்கள்..
துயரங்களுடன் பயணிக்கிறது. தொடருங்கள் நன்றாக இருக்கிறது.
வணக்கம் மது,
கொஞ்ச நாளாக தீராத பிசி!
இப்போது தான் உங்கள் தொடரைப் படிக்கிறேன்.
அலைகளின் ஒலியும் அதை கிழிக்கும் துடுப்பின் ஒலியும் நாம் இருவரும் தனித்துவிட்டோமோ என ஏங்குகையில், இல்லையில்லை நானும் கூடவே இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே எங்கள் மேனிகளை உரசிச்சென்றது கடற்காற்று. //
புதுவையரின் கவிதையை தரிசித்தது போன்ற உணர்வு.
அவ்வளவு அருமையான வர்ணை!
மது இவ்வாறான வேதனையான கடற் பயணங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். முன்பு சில சமயம் பணத்தினை வாங்கி விட்டு யாழ் தீவகப் பகுதிகளுக்கு அன்ண்மையாக உள்ள மணற் திட்டுக்களிலும் வன்னியிலிருந்து ஏற்றி வரும் மக்களை இறக்கி விடுவார்கள் என்பதனை அறிந்திருக்கிறேன்!
இப்போது இந்தக் கடற் பயணத்தினை முழுவதுமாக அறிவது போன்ற உணர்வு உங்கள் பதிவினூடாக கிடைத்திருக்கிறது.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.
Post a Comment