தொடரின் முன்னைய பாகங்களை படிக்க வழிதேடும் சுவடுகள்
***************************************************************************************
“இப்பிடியே விட்டிட்டு போக மனமில்லாமல் கிடக்குது ஆச்சி..கிடங்கு ஒண்ட வெட்டி புதைச்சுவிடுவம்” பொன்னம்மா கிழவியும் சரியென்பதுபோல் தலையாட்டினார்.
“ஓமடாப்பா… இல்லாட்டி சீவன் இங்கினைக்கதான் அந்தரிக்கும்”
“ஓம் ஆச்சி”
ராசன் மாமா எடுத்துவந்த பலகைத்துண்டால் இருவரும் மண்ணை கிளற ஆரம்பித்தார்கள்.. மணல் மண்ணாகையால் அவ்வளவு சிரமமாக இல்லை. பதினைந்து நிமிடத்திலேயே அளவான கிடங்கு வந்துவிட்டது.
”ம்ம் ரெண்டுபேர் வாங்கோ” ராசன் மாமா சொல்லிக்கொண்டே எழுந்து படகுக்கு அருகில் சென்றார். அவரை தொடர்ந்து உதவிக்கு இருவர் சென்றார்கள். ஒருவர் படகை முண்டுகொடுத்து பிடிக்க ராசன் மாமாவும் இன்னொருவரும் அந்த சிறுவனின் உடலை தூக்க முயற்சித்தார்கள். தூக்கும்போதுதான் கவிழ்ந்து கிடந்த சிறுவனின் வயிற்று பகுதியில் படகின் பலகை துண்டு ஒன்று முறிந்து குற்றியிருப்பது தெரியவந்தது.
வயிற்றை துளைத்த பலகையின் வழியாக குடல் வெளியேறி தொங்கிக்கொண்டிருந்தது.
”பொம்பிளையாக்கள் அங்கால போங்கோ” பெண்கள் இதை பார்த்தால் தாங்கமாட்டார்கள் என்பதால் அவர்களை சிறிது தூரம் தள்ளி நிற்கச்சொன்ன ராசன் மாமா மற்ற இருவரின் உதவியுடன் பிணத்தை தூக்கிக்கொண்டு தோண்டிய குழிக்குள் வைத்தார். சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த கதிரேசன் அண்ணா கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை போட்டு குழியை மூடினார்.
”அம்மா…. அப்பா வாறார் அப்பா வாறார்…”
தம்பியின் மழலை கத்தலை கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க தூரத்தில் படகு விரைந்து வருவது தெரிந்தது. எல்லோர் மனதிலும் நிம்மதி. போனவர்கள் திரும்பி வந்தது மாத்திரமல்ல, படகு வரும் வேகத்தை பார்க்கும்பொழுதே தெரிந்தது எஞ்சின் மாற்றிவிட்டார்கள் என்று. சீக்கிரமாகவே படகு மண்பிட்டியை அடைந்ததுவிட்டது.
“என்ன பாலன் அண்ணை இஞ்சின் மாத்தியாச்சோ”
“இல்லையடாப்பா கதிர்… மாத்திறது கஷ்டமா போச்சு…… உடன மாத்தேலாதாம்.. பழசத்தான் திருத்தி கொண்டந்தனாங்கள்”
அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ராசன் மாமா “எப்பிடியோ! பிரச்சினை தீர்ந்துது.. அங்கால கரைக்கு போய் சேருமட்டும் எந்த பிரச்சினையும் வந்திரப்படாது” என்று சொல்லிவிட்டு பாலன் அண்ணாவின் பக்கம் திரும்பிவிட்டு ”பாலன் அண்ணை.. எனி என்ன?..... வெளிக்கிடலாம்தானே?..
வந்த வேகத்தில் களைத்துப்போய் கீழே இருந்த அப்பா “கொஞ்சம் பொறுங்கோ.. பாணும் வாழைப்பழமும் வாங்கியந்திருக்கிறம், சாப்பிட்டுட்டு போவம்” என்று சொல்ல பாலன் அண்ணா தலையில் கை வைத்தார்.
“ஏன் பாலன் அண்ணை முழிக்கிறியள்…. அந்த பாண் பெட்டியை எடுத்தாங்கோவன்”
”இல்லை அப்பன் அண்ணை…… அது வந்து….. பாண் பெட்டி….”
“பாண் பெட்டிக்கு என்ன?.. ஏன் இப்ப பதறுகிறியள்..”
“அப்பன்ன கோவிக்காதீங்கோ…….. இஞ்சின தூக்கி வச்சிட்டு பாண் பெட்டிய எடுக்க மறந்துபோனன்………”
“என்ன விழல் கதை கதைக்கிறியள்… மறந்துபோனியளோ??
“அப்பன் அண்ணை தயவு செய்து கோபிக்காதீங்கோ..”
“கோபிக்காமல் என்ன செய்ய சொல்லுறியள்?.. உங்கள நம்பி வந்ததில இருந்து எவ்வளவு கஷ்டம்..ஒழுங்கான இஞ்சின் இல்லை..எவ்வளவு தூரம் மூச்சு முட்ட தள்ளிக்கொண்டு வாறம்……. சொன்ன நேரத்துக்கு கொண்டுபோய் விடுவியள் எண்டுதானே சாப்பாடு தண்ணி எடுத்துக்கொண்டராமல் வந்தனாங்கள்..”
அப்பா கோபப்பட்டதை அன்றுதான் முதன்முதலாக பார்த்தேன். இயலாமை, பகல் நடந்த விபத்தால் ஏற்பட்ட பயம் என்பன சேர்ந்து சாந்தமான மனிதரை கூட கோபக்காரனாக்கிவிட்டது.
சூரியன் படுக்கைக்கு சென்றுவிட இருள் மெல்ல மெல்ல போர்வை விலக்கி பூமியை எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் பூமி இருளின் தழுவலுக்கு உட்பட்டுவிடும். அந்த பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மண்பிட்டிகள் பரந்து காணப்படுவதால், இருள் முற்றாக சூழ்ந்துவிட்டால் படகு செலுத்துவது கடினம்.
நிலமையை புரிந்துகொண்ட ராசன் மாமா “ சரி அப்பன் விடுங்கோ..அவர் என்ன தெரிஞ்சுகொண்டா செய்தவர்.. ஏதோ தெரியாம நடந்திட்டுது.. இப்ப வெளிக்கிட்டாத்தான் நேரத்திற்கு போய்ச்சேரலாம்” என்று அப்பாவை சமாதானப்படுத்திவிட்டு சாமான்களை எடுத்து தோளில் போட்டபடியே “எல்லாரும் வாங்கோ” என்றார். அப்பா ஒன்றும் சொல்லாமல் எழுந்து சாமான்களை எடுத்து தோளில் போட்டபடி எங்களையும் கையில் பிடித்தபடி படகை நோக்கி நகர்ந்தார்.
படகு மீண்டும் அலைகளை உழுதபடி கடற்பரப்பில் விரையத்தொடங்கிவிட்டது. முன்புபோல் வேகமாக செல்லமுடியவில்லை. அலைகள் அதிகமாக இருந்தபடியால் சிறிது வேகம் குறைவாகவே சென்றுகொண்டிருந்தது. நேற்றைய பின்னிரவில், சில்லென்று மேனி தொட்டு செல்லும் கடற்காற்றின் இதமான ஸ்பரிசத்தையும், அலைகளின் ஜல் ஜல் சங்கீதத்தையும் அந்த இரண்டும் கலவிகொண்டு பிறந்த அற்புதமான சுகத்தையும் அனுபவித்த மனம் இன்று ஏனோ அவற்றில் லயிக்கவில்லை. நேற்று சுகத்தை தந்த அலை ஒலி, இன்று அந்த அப்பாவி உயிர்களை ஏப்பம் விட்ட ஆணவ ஒலியாகத்தான் கேட்டது.
எவ்வளவு நேரம் இப்படியே சிந்தனையில் போயிருப்போமோ தெரியாது..திடீரென்று பின் படகில் இருந்த ஒருவர் அடித்தொண்டையில் குரலை அடக்கி கத்தினார்.. “ஆமிக்காரன், ஆமிக்காரன்…..”
எல்லோரும் திடுக்கிட்டு அவர் காட்டிய திசையில் நோக்கினோம். வெகு தொலைவில் இராணுவத்தின் ரோந்து படகு ஒன்று ஒளியை பாய்ச்சியபடி வந்துகொண்டிருந்தது. மறுபடியும் எல்லோரிடத்திலும் பயன் தொற்றிக்கொண்டது.
“கதிர்… கெதியா போட்ட கரைப்பக்கம் திருப்பு.. அவங்கள் வாறதுக்குள்ள எப்பிடியும் கொஞ்ச தூரம் கரைய நெருங்கியிரலாம். கரைய அண்டி அவங்கள் வரமாட்டாங்கள்…” பாலன் அண்ணா படபடத்தார்.
தொடரும்.....
அரும்பதங்கள்
ஒண்ட - ஒன்றை
இங்கினைக்கதான் - இவ்விடத்தில்தான்/ இங்கேதான்
முண்டுகொடுத்து - தாங்கிப்பிடித்து
மாத்தேலாதாம் - மாற்ற இயலாதாம்
விழல் கதை - விசர் கதை/ பைத்தியத்தனமான கதை
கரையை அண்டி - கரையை ஒட்டி
**********************************************************************************************************************
நன்றி - படங்கள் உதவி ஈழவயல்


13 comments:
நானும் இதே மாதிரி தான் வந்திருக்கிறேன்..ஆனால் ஞாபகமில்லை.இப்போ தான் தெரிகிறது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று..
என்னையா தமிழ்மணத்தில் நான் தான் முதல்...இப்ப தான் அக்டிவ் ஆகியோ?
வணக்கம் மது,
இருங்க படிச்சிட்டு வாரேன்.
ஒரு பக்கம் வேதனை, மறு பக்கம் அவலம்.
அந்தச் சிறுவன் போல எத்தனை அநாதரவான பிணங்களை எம் கடல்த் தாய் சுமந்திருப்பாள்.
பசிக் கொடுமை.
பாணைத் தவற விட்டு வந்த கப்பல் ஓட்டி...
எவ்வளவு கொடுமைகளைச் சந்தித்திருக்கிறீங்க.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.
அண்ணே தொடருங்கள்..நானும் தொடர்கிறேன்...
மாப்ள வலி நிறைந்த அந்த தருணங்களில் இருந்தவர்களை நினைக்கவே மனம் கனக்குது!..
வணக்கம்,மதுரன்!பதறுகிறது.
வணக்கம் பாஸ் என்னிடம் பல கருத்துக்கள் இருக்கு ஆனால் உங்கள் அவலங்களை நினைக்க மனம் வலிக்கின்றது தொடருங்கள்
//சூரியன் படுக்கைக்கு சென்றுவிட இருள் மெல்ல மெல்ல போர்வை விலக்கி பூமியை எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் பூமி இருளின் தழுவலுக்கு உட்பட்டுவிடும். //
ரசித்தேன்.சுவடுகள் ஆழப்பதிந்து செல்கிறது.தொடருங்கள்.
கரையைச் சேருமா படகு? என்ற ஆவலிலும், கடலில் சங்கமித்த சந்ததியின் வேதனைகளையும். தந்து செல்லும் தொடரினைத் தொடர்கின்றேன். தொடருங்கள் வேதனைகளின் சுவடுகளை!
தொடர் நன்று மது..... ஏன் இந்த அவசரம் தொடர் போட்டு சில நாட்கள் இடைவெளி விட்டு இருக்கலாம் தானே அடுத்த பதிவுக்கு.... :( எவ்ளோ பேர் மிஸ் பண்ணியிருப்பார்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களிற்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் சகோ .
மனதைக் கனக்க வைக்கிறது.
Post a Comment