Tuesday, November 22, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 2

இத்தொடரின் முதல் பாகத்தினை படிக்க வழிதேடும் சுவடுகள் - பாகம்1

****************************************************************************************************************************
அம்மாவின் முகத்தை பார்க்கும்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று புரியவில்லை. பழகிய மனிதர்களை விட்டுப்போகிறோமே என்ற துக்கமா? சொந்த ஊரை, சொந்த வீட்டை பார்க்கப்போகிறோம் என்ற ஆனந்தமா?  இப்படியொரு பூமியில் மீண்டும் வாழ வருவோமா என்ற ஏக்கமா?

உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த, இது துக்கம், இது ஏக்கம் என பிரித்தறிய முடியாத அந்த வயதில் அம்மாவின் உணர்வுகளை புரிந்துகொள்வது மிகச்சிரமானதாகவே இருந்தது. புரிந்துகொள்ளவும் முயற்சிக்கைவில்லை நான். ஏனென்றால் எனக்கு அப்போது இருந்தது ஒரேயொரு உணர்வு. பதட்டம் கலந்த குதூகலம். பிஞ்சு மனதிற்குள்ளேயே கனவுகளால் வரைந்து கற்பனைகளால் வர்ணம் தீட்டப்பட்ட அந்த யாழ்ப்பாணத்தை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசம், சிறுவயதுமுதலே பழகிவந்து என் நண்பர்களை விட்டுபோகிறோமே என்ற துக்கத்தை கூட மழுங்கடித்திருந்தது.

“சரி அக்கா வெளிக்கிடுவம். வெளிக்கிட்டுப்போட்டு கனநேரம் நிக்கேலாது. கண்டாங்கள் எண்டா எங்கட கதை சரி” சந்திரன் அண்ணா படபடத்தார். ”பூநகரி வரைக்குமாவது வந்திட்டு போங்க” என்று அப்பா வற்புறுத்தி கேட்டதால் சந்திரன் அண்ணாவும் சம்மதித்திருந்தார்.

Wednesday, November 9, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம்1

ஆடி முடிந்து ஆவனி மாதம் ஆரம்பமாகியிருந்தது.
ரியூசனில் இருந்தாலும் மனம்கொள்ளாத சந்தோசம் எனக்கு. “சனிக்கிழமை யாழ்ப்பாணம் போகப்போறம்” என்று அம்மா சொன்னது பழைய படங்களில் வரும் பிளாஸ்பேக் மாதிரி மனசுக்குள் றீல் சுத்திக்கொண்டிருந்தது.

நான் பிறந்தது யாழ்ப்பாணமாக இருந்தாலும் பிறந்த மறுநாளே என்னையும் தூக்கிக்கொண்டு ஓடத்தொடங்கி விட்டதாக அம்மா அடிக்கடி கூறுவார். வேலனை, திருநெல்வேலி, ஈச்சமோட்டை என்று தொடங்கிய ஓட்டம் இறுதியாக விசுவமடுவில்தான் முடிந்திருந்தது.

இந்த இடத்தில் விசுவமடுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அங்கு வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் அது ஒரு சொர்க்கபூமி என்று. எல்லையற்று விரிந்திருக்கும் வன்னிப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் கிராமம்தான் விசுவமடு. நீர்வளம், நிலவளம் என்று வருடத்தின் 365 நாட்களும் விவசாயிகளுக்கு செல்வம் கொழிக்கும் பூமி அது.